உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை (LGPMS - Local Government Payment Management System) எனும் மென்பொருள் அமைப்பு தொடர்பான செயல்முறைப் பயிற்சி வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் சனிக்கிழமை, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் சபைச் செயலாளர்கள், விடய அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 110 அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்துக்குக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை மென்பொருள், இணையவழிப் பணப் பரிவர்த்தனைகள், பொதுமக்களின் முறைப்பாடுகள், சேவைத் தேவைகள், ஆலோசனைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட நிர்வாகச் செயற்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான நவீன தளமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியத்தை குறைத்து, சேவைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் அணுகக்கூடிய சூழல் உருவாகும். அதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத் திறன், நிதி முகாமைத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் சேவை வழங்கலின் தரம் ஆகியவற்றையும் மேம்படுத்துவதில் இந்த மென்பொருள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியின் போது, மென்பொருளின் தொழில்நுட்ப அம்சங்கள், இணையவழிப் பணப் பரிவர்த்தனை நடைமுறைகள், பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து கண்காணிக்கும் முறை, சேவை விண்ணப்பங்கள் மற்றும் நிர்வாகத் தகவல்களை மின்னணு வடிவில் முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்களுக்கு வேகமான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு நிர்வாகத்தை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.













No comments