Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முடிவிலாத் தேடல்: நீதிக்கான நீள் பயணம்


மயூரப்பிரியன் 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படாததால் , இன்றும் அவர்களின் உறவுகளின் மனதுகளில் ஆறாத வடுவாக ஆழப்பதிந்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகள்.

 தங்கள் கண்முன்னே அழைத்துச் செல்லப்பட்ட, கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல்போன தம் உறவுகளைத் தேடித் தாய்மார்களும் , மனைவிமார்களும் உறவினர்களும் முன்னெடுத்து வரும் போராட்டம், வெறும் நீதிக்கான கோரிக்கை மட்டுமல்ல; அது தங்களின் அன்புக்குரியவர்களின் இருப்பு மற்றும் உண்மைநிலைக்கான தேடலாகும்.

ஆண்டுக் கணக்கில் தெருவோரங்களில் பந்தல் அமைத்து, வெயில்-மழை பாராது, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம், உலக மனித உரிமைப் போராட்ட வரலாற்றில் நீடித்த மற்றும் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அவ்வாறான நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு. 

அதற்கு முன்னராக ,1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4அது உலக தமிழாராய்ச்சி படுகொலை செய்யப்பட்ட 09 பேரின் நினைவாக யாழ். நகர் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. 

பேரணியின் முன்பாக வெள்ளை வானில் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவ படங்கள் ஒட்டப்பட்டு , முன் செல்ல , கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் , காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களை ஏந்தியவாறும் பேரணியாக தாய்மார்கள் தந்தை செல்வா கலையரங்கை அடைந்தனர். 

தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ், உட்பட அரசியல்வாதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். 

மாநாட்டில் ஒரு அங்கமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை பொருட்கள் , அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள் , அவர்களின் நினைவாக இன்றும் உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக குடும்பத்தினரால் சேமித்து வைக்கப்பட்டுள்ள காலணிகள் , உடுப்புக்கள் , அவர்களின் பாவனை பொருட்கள் என்பவை , அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான குறிப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் "உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர். 

உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

அவர்கள் தனிப்பட்ட அச்சுறுத்தல்கள், நிதி மற்றும் உணர்வுரீதியான சுமைகளை எதிர்கொள்வதோடு, வாழ்வாதார நிலைமைகளின் சீரழிவையும் சகித்துக் கொள்கின்றனர்.

எந்தவொரு தகவலும் கிடைக்காமலேயே பல தமிழ் தாய்மார்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்பதை நான் கேட்டறிந்தேன். காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறியாமலேயே எந்தவொரு தாயும் உயிரிழக்கக் கூடாது" என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் என  தெரிவித்தார். 

அதேவேளை "தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்பு சபை மதிப்பிட்டுள்ளது

காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதில் தொடரும் தோல்வியானது, எப்போதும் சித்தரிக்கப்படுவது போல வெறும் முடியாத ஒரு நிர்வாக நடைமுறை மட்டுமல்ல; அது பொறுப்புக்கூறலின் மிக ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது.

இப்போதும் கூட, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பதில்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகத் தேடி வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். நாம் எவ்வளவு காலம் தாமதிக்கிறோமோ, அவ்வளவு காலம் பதில்களை அறிவதற்கான வாய்ப்பை இழந்து கொண்டிருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பலமுறை பேசியுள்ளது. ஆனால் இதுவரை, எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.

உண்மையில், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இந்த சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நடத்திய சமீபத்திய நிகழ்வுக்கு வெளியே நடந்தவை, அந்த இடைவெளிக்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.

நிகழ்வுக்கு வெளியே போராட்டம் நடத்த முயன்ற தாயார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸார்  மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கை, அமைதியான வழியில் ஒன்று கூடும் உரிமையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய இலங்கை அரசாங்கத்தின் கடமைக்கு முற்றிலும் எதிரானது.

இந்த முரண் எவருக்கும் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். யாருக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோ, அவர்களே பலவந்தமாக அதிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்; இந்த நிலை மாற வேண்டும்.

கடந்தகால உள்நாட்டு வழிமுறைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த இடங்களில், தனது அணுகுமுறை முந்தைய அரசாங்கங்களை விட வேறுபட்டதாக இருக்கும் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இன்னும் உள்ளது " என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் தெரிவித்தார்.

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வேதனைகளும் , அவர்களின் துன்பங்களையும் ஜனாதிபதி நன்றாக அறிவார். அவரின் சகோதரன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். இன்றும் தனது காணாமல் ஆக்கப்பட்ட மகன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதியின் தாய் போதி பூஜை செய்து வருகிறார். அதனால் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விடயத்தில் ஜனாதிபதி கரிசனை கொண்டு , அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதிலும் உண்மைகளை கண்டறிவதற்கான விசாரணைகளையும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்" என அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கடற்தொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார். 

"காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 23,352 விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து 16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000 விண்ணப்பங்கள் எமது தலைமை அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.

அதேவேளை, எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளோம்

அத்துடன் இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது" என காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது,

இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது" என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக அனைத்து தரப்பினர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கண்டறியவும் , அவர்களின் உறவினர்களுக்கு உண்மையையும் நீதியையும் பெற்றுக்கொடுக்க முயன்று வருகின்றனர் 

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வெறுமனே இழப்பீடுகளையோ அல்லது தற்காலிக வாக்குறுதிகளையோ வழங்கி இப்போராட்டத்தை மௌனிக்கச் செய்ய முடியாது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான வெளிப்படையான உண்மையும், குற்றமிழைத்தவர்கள் மீதான சட்ட நடவடிக்கையும் மட்டுமே அவர்களது நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு நியாயமான தீர்வைத் தரும். அதுவே இத்தனை ஆண்டு காலக் கண்ணீருக்கு நாம் வழங்கும் உண்மையான மரியாதையாக அமையும்.

No comments