'வடக்கின் வசந்தம்' போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வினைத்திறனுடன் மாகாண நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம்சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுகிறது
இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு, அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளை முன்னெடுத்து வருகிறது.
ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது.
கடந்த காலங்களில் 'வடக்கின் வசந்தம்' போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது
. எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஒதுக்கப்படும் நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கான தயார்நிலையில் மாகாண நிறுவனங்கள் இருக்க வேண்டும்
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற முரண்பாடுகள் மற்றும் போரால் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகளை அடுத்த தலைமுறையும் எதிர்கொள்ளக் கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து முரண்பாடுகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்
சுகாதாரத்துறையை வலுப்படுத்துதல், மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல், சிறந்த கழிவு முகாமைத்துவத்தை உருவாக்குதல் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே அரசாங்கம் நிதியை முன்னுரிமையுடன் செலவிட்டு வருகிறது.
நாட்டில் போதுமான நிதி வளம் காணப்பட்டமையாலேயே டித்வா பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கத்தால் உடனடியாக நிதி வழங்க முடிந்தது,
தற்போது ஏற்றுமதி மூலம் கிடைக்கும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்காலத்தில் 15 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்தார் .









No comments