Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தியாக தீபத்தின் சிலை அகற்றம் - வடக்கு கிழக்கில் நாளை போராட்டம்


நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அடாவடித்தனமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அதனை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவக் கோரியும் நாளைய தினம் திங்கட்கிழமை வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் வடக்கு கிழக்கு உப தலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான அமலராஜ் அமலநாயகி அறிவித்துள்ளார். 

மட்டு.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டே போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் 

நல்லூர் பகுதியில் தமிழ் மக்களால் புனிதமாகப் பூஜிக்கப்பட்டு, நேற்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை,பொலிஸார் அடாவடித்தனமாக அகற்றிக் கொண்டு சென்றுள்ளனர். 

தமிழ் மக்களின் அடையாளங்களையும் நினைவுகூரும் உரிமைகளையும் திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசாங்கங்களின் இனவாதப் போக்கையே இது மீண்டும் நிரூபித்துள்ளது. 

தென்னிலங்கை இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறான கோர முகத்தை அரசு காட்டுகின்றது. 

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார், அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் சிலையை அகற்றியிருப்பது, இந்நாட்டில் இருவேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதையே காட்டுகிறது. 

இதனைக் கண்டித்து, நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம்: 

யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் சிலை அமைந்திருந்த இடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும். 

திருகோணமலை சிவன் கோவிலடியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் தொடங்கி கச்சேரி வரை கண்டனப் பேரணி நடைபெறும்.

அம்பாறை மத்திய சந்தையில் தொடங்கி மணிக்கூட்டுக் கோபுரம் வரை பேரணி இடம்பெறும். 

மன்னார் தந்தை செல்வா நினைவுத் தூபியில் போராட்டம் நடைபெறும்.

வவுனியா பொங்குதமிழ் நினைவுத் தூபியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை பேரணி செல்லும்.

மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவுத் தூபியில் தொடங்கி காந்தி பூங்கா வரை பேரணி முன்னெடுக்கப்படும். 

இந்த போராட்டத்தில் மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்றப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும். 

அகற்றப்பட்ட திலீபனின் சிலை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும். சிலை அகற்றப்பட்டதற்கான பின்னணி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். 

எமது வரலாற்றுச் சின்னங்களையும் நினைவேந்தல் உரிமைகளையும் எவராலும் அழிக்க முடியாது என்றார்

No comments