Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிலை விடயத்தில் தமிழரசு மீது சேறு பூசினால் முன்னணியை அம்பலப்படுத்துவோம்


தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்தில் தமிழரசு கட்சியின் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்நது சேறு பூசல்களில் ஈடுபட்டால் அவர்களின் இரட்டை வேடங்களை அம்பலப்படுத்துவோம் என யாழ். மாநகர சபை முதல்வர் வி.மதிவதனி எச்சரித்துள்ளார். 

நல்லூர் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபத்தின் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் பெயர்த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்திற்கு , தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் மற்றும் மாநகர சபை முதல்வர் உள்ளிட்டோரும் காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 

அது தொடர்பில் யாழ் . மாநகர முதல்வர் வி.மதிவதனி , பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் மயூரன் ஆகியோர் இணைந்து மாநகர சபையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி இருந்தனர். 

குறித்த ஊடக சந்திப்பில் முதல்வர் மேலும் தெரிவிக்கையில், 

தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வில் சிலை வைப்பதற்கு அனுமதி என, சிலையை அங்கு வைத்துவிட்டு கடிதம் மூலம் கோரினார். 

தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களின் உணர்வுசார்ந்த விடயமென்பதால் அதனை பொருட்படுத்தாமல் கட்சியிடம் கதைத்துவிட்டு அனுமதி வழங்கியிருந்தோம்.

அந்த கோரிக்கை கடிதத்தில் கூட தற்காலிகமாக சிலையை வைப்பதற்கென்றே அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சபையின் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரதும் ஆதரவுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸார் எங்களிடமும் வந்து சில விடயங்களை கேட்டறிந்திருந்தனர். அதே போன்று சபையின் அனுமதி கோரி கடிதம் வழங்கிய உறுப்பினரிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகள் 26ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை அடுத்து, சிலை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தெரிவிக்கப்பட்டது. 

ஆனாலும் அவர்கள் அந்த விடயத்தை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில்  அங்கு வந்த பொலிஸார் சிலையை அகற்றிச் சென்றிருக்கின்றனர்.

உண்மையில் இந்தச் சிலை அகற்றுகிற விடயம் குறித்து பொலிஸார் எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவும் இல்லை. சிலையை அகற்றுங்கள் என பொலிஸாரிடம் நாங்கள் கோரவும் இல்லை.

இருந்த போதிலும் பொலிஸார் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்காக தன்னுயிரையே தியாகம் செய்த தியாகியின் சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றமை எங்களுக்கும் மிக மனவருத்தத்தையே ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறான நிலையில் சிலை அகற்றுவதற்கு நாங்களும் எங்களுடைய கட்சியும் துணை போயுள்ளதாக சேறுபூசுகின்ற வகையில் ஊடகங்கள் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்திருக்கின்றனர்

அவர்களின் அரசியல் நோக்க குற்றச்சாட்டுக்களையும் சேறுபூசல்களையும் நாங்கள் அடியோடு நிராகரிக்கிறோம். எங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க முன்னதாக இந்த விடயத்தில் தாங்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை பரிசீலித்து பார்க்க வேண்டும்.

தங்கள் மீது உள்ள தவறை மறைப்பதற்காக எங்களைக் குற்றஞ்சாட்டி தங்களை புனிதர்களாக்கி கொள்ளும் அரசியலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை ஏனெனில் அவர்களின் இரட்டை வேடங்களை நாங்களும் அம்பலப்படுத்த தயாராகவே உள்ளோம் என்றார்


No comments