Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாண விவசாய உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை: அமைச்சர் வசந்த சமரசிங்க!


யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகளை மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண மற்றும் மத்திய அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளின் கீழ் இயங்குகின்றபோதிலும், அமைச்சரினதும் பிரதி அமைச்சர்களினதும் வழிகாட்டுதலின் கீழ் அவற்றின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்  

கூட்டுறவுச் சங்கங்கள் செலுத்தும்  SSL வரி தொடர்பான பிரச்சினைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள், கொள்வனவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுகிறது 

மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் நெல்லை உலர்த்துவதற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு இவ்வாண்டு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது 

 இதன்கீழ் 50 இயந்திரங்களைக் கொள்வனவு செய்து அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

உற்பத்தி உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது 

அத்துடன், 2025ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடையிலான தேசிய உற்பத்தித்திறன் போட்டியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது அதில் வெற்றிபெறும் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது 

கூட்டுறவு மற்றும் கிராமிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப்பெறுவதில் வைப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக மீள வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்  

மேலும், விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்காகக் கொள்வனவு மத்திய நிலையங்களை உருவாக்குவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளை மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும், அவற்றுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments