Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை


வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சுற்றாடல் அமைச்சும் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுர ஜெயக்கொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வளவாளர்கள், வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள், பிரதி முதல்வர்கள் , நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சுற்றாடல் தொடர்பான பணிகளைக் கையாளும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் சட்டத் திருத்தங்கள், அவற்றின் முக்கிய ஏற்பாடுகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் உள்ளூராட்சி மன்றங்கள் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக, 'விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு' என்ற அடிப்படையில், சுற்றாடல் மாசுபாட்டுக்குக் காரணமாகும் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அவற்றின் பயன்பாட்டுக்குப் பின்னரான கழிவுகளை மீள்சுழற்சி செய்வதிலும் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கையாள்வதிலும் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், நுண் பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள், பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், கழிவு முகாமைத்துவத்தைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகச் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் குறித்த அறிவைப் பெற்றுக்கொள்வதுடன், அவற்றை நடைமுறையில் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் உள்ளூராட்சி மன்றங்களிடையே ஏற்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது





No comments