Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மௌனக் கொல்லியாக உருவெடுக்கும் நீரிழிவு நோய் - உள்ளூராட்சி சபைகள் மக்களுக்கான உடற்பயிற்சி வசதிகளை மேம்படுத்த வேண்டும்


யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துள்ளமையால் , பொதுமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்குத் தேவையான நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏனைய உடற்பயிற்சி வசதிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேம்படுத்தி வழங்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன் கோரியுள்ளார் 

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் , யாழ். மாவட்ட நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  விழிப்புணர்வு மருத்துவ முகாம் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. 

அதில் விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

நீரிழிவு நோய் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், எமது சமூகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. 

இது ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோயாக இருப்பதால், 'மௌனக் கொல்லி'யாக உருவெடுக்கின்றது

இலங்கையில் நீரிழிவு நோயின் பரவல் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று முதல் நான்கு வீதமாக இருந்த இந்நோய் தற்போது 30 முதல் 40 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது

 யாழ்ப்பாண மாவட்டத்தின் சுமார் ஆறு இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு இலட்சம் பேர் வரையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல. 

சமூக அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். 

அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினரை நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் 

அதேவேளை, நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை மக்களுக்கு வழங்குவதுடன் நின்றுவிடாமல், மக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் 

குறிப்பாக, சீனி மற்றும் மாச்சத்து அதிகமுள்ள உணவுகளின் அளவைக் கட்டுப்படுத்துதல், சீரான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல், தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் 

மேலும், மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்குத் தேவையான நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏனைய உடற்பயிற்சி வசதிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேம்படுத்தி வழங்க வேண்டும்

நீரிழிவு நோயைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் தனிநபர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என மேலும் தெரிவித்தார். 







No comments