வடக்கில் இடம்பெறும் காணி மோசடிகளுக்கும் , மணல் கடத்தல்களுக்கும் , வன்முறை சம்பவங்களுக்கும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் துணை போவதாகவும் , அவர்கள் தொடர்பிலான தகவல்களை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகிறது..
அதிகளவான தனியார் காணிகள் காணப்படும் யாழ்ப்பாணத்தில், உறுதிப் பத்திரங்களை மோசடியாகத் தயாரித்து அல்லது வெளிப்படுத்தல் உறுதி மூலம் காணிகளை விற்பனை செய்வதும், உரிமைகளைச் சட்டவிரோதமாக மாற்றுவதும் இடம்பெறுகிறது.
இத்தகைய மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும், அதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்.
காணி மோசடியில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் சிலருக்குப் பொலிஸாருடன் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர், இத்தகைய முறைப்பாடுகள் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வு, போக்குவரத்து மற்றும் மரக் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன
குறிப்பாகப் பளை, கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளின் ஊடாக இத்தகைய கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இச்செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும், கடத்தல்களைத் தடுக்க முற்பட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்விடயங்களில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விவரங்களைத் தனிப்பட்ட முறையில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளேன்.
மேலும், எழுதுமட்டுவாள் பகுதியில் பொலிஸ் காவலரணை மீண்டும் நிறுவுவதற்கும், அப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்குமான சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள்
மேலும் வாள்வெட்டுக் குழுக்கள் உள்ளிட்ட மோதல்களில் ஈடுபடும் சில தரப்புகள் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கின்றன.
தற்போது நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இத்தரப்புகள் மீளச் செயற்படுவதற்கான முயற்சிகள் காணப்படுவதால் அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.
இக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுவதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான விவரங்களையும் உயர் அதிகாரிகளிடம் கையளித்துள்ளேன் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.





.jpeg)



No comments