வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 22ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு கிழக்கு மீள்குடியேற்றத்திற்காக 4000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
வலி. வடக்கில் சுமார் 2ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாம் போராடி வருகிறோம். எமது காணிகளை விடுவித்தால் மாத்திரமே நாம் எமது காணிகளில் மீள குடியமர முடியும்.
எமது காணிகளை விடுவித்து எம்மை மீள் குடியேற அனுமதித்தாலே மீள் குடியேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எமக்கான வீட்டு திட்டங்கள் உள்ளிட்ட உதவி திட்டங்களை மேற்கொள்ள முடியும். எனவே எமது காணிகளை விடுவித்து , எம்மை மீள் குடியேற்ற அரசாங்கம் துரித கெதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரியுள்ளனர்.












No comments