பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்குத் துரிதமான பதிலளிப்பு மற்றும் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குதாரர்களுடனான மாவட்ட மட்டக் கலந்துரையாடல், மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச மட்டங்களில் அடையாளம் காணப்பட்டு, உரிய மட்டங்களில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அணுகுமுறைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது.
இதன்போது, சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், குடும்ப அட்டை தொடர்பான சிக்கல்கள், வீட்டுத்திட்ட உதவிகள், பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல், கல்வி தொடர்பான பிரச்சினைகள், மனநலப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளின் ஊடாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நட்பு நிலையப் பொறுப்பதிகாரி வைத்தியர் ஸ்ரீ ராம், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. தயாபரி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள், சமுர்த்தி இணைப்பாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.














No comments