Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யுத்தத்தினால் வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் 2028 டிசம்பர் மாதத்திற்குள் நிரந்தர வீடுகள்


யுத்தத்தினால் வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் 2028 டிசம்பர் மாதத்திற்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதிஎச். எம். சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் கீழ், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் வீடமைப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்த பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பலாலி வடக்கு ஆரோக்கிய மாதா தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டச் சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தத்தினால் வீடுகளை இழந்து சுமார் 20 ஆண்டுகளாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த குடும்பங்கள் இன்றும் தற்காலிகக் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். 

அந்தக் கூடாரங்களிலேயே அவர்களது பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்றுள்ளமை மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். மக்கள் தொடர்ந்து இத்தகைய தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்வதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு   இவ்வாண்டில் சுமார் 1,500 மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்,

 எஞ்சியுள்ள சுமார் 10,500 குடும்பங்களுக்கும் கட்டம் கட்டமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2027ஆம் ஆண்டில் சுமார் 5,000 வீடுகளையும், 2028ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள  வீடுகளையும் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வீட்டுத்திட்டங்கள் முழுமையான நிவாரண அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதுடன், பயனாளிகள் பெற்றுக்கொள்ளும் நிதியைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. 

2028 டிசம்பர் மாதத்திற்குள் யுத்தத்தினால் வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்  

அதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமை, காணி வசதியின்மை மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது, 

அப்பகுதி மக்களின் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 2027ஆம் ஆண்டிலும் கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் 

வீடமைப்பு அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்படாமல், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 

இலங்கையில் புதிய அபிவிருத்தி யுகமொன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments