நெடுந்தீவு பிரதேசத்திற்கான எரிபொருள் நிரப்பு நிலையம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D. J. A. S. De S. ராஜகருணா ஆகியோரின் பங்குபற்றலுடன் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்படவுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோகத் திட்டத்தின் கீழ், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, எரிபொருள் விநியோகத்திற்கான பவுசர் கடல் வழியாக நெடுந்தீவைச் சென்றடைந்துள்ளது
இதற்கமைய, 6,600 லீற்றர் பெற்றோல் 92 ஒக்டேன், 13,200 லீற்றர் ஒட்டோ டீசல் மற்றும் 19,800 லீற்றர் மண்ணெண்ணெய் என மொத்தமாக 39,600 லீற்றர் எரிபொருள் நெடுந்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுவரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்த நெடுந்தீவு மக்களுக்கு, இப்புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் பெரும் பயனளிப்பதுடன், அத்தியாவசியப் போக்குவரத்து, மீன்பிடித் தொழில் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் பெரிதும் உறுதுணையாக அமையவுள்ளது.









No comments