Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி


எங்களுக்குச் சட்டம் போதாது என்றால் புதிய சட்டங்களை உருவாக்குவோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆராயப்பட்டு வருகின்றது. சில தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, சந்தேகநபர் ஒருவரைத் தடுத்துவைக்கும் காலத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைக்கவும், தேவையற்ற சில விடயங்களை நீக்கவும் நாம் தயாராகவுள்ளோம் என  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற 'விலகிச்செல்' செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டைக் குறிக்கும் சர்வமத மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனம், மதம் மற்றும் வயது பேதமின்றிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சமூகத்தில் மதிப்புக்கும் வழிபாட்டுக்கும் உரிய மதத்தலங்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்புகளுக்கும் போதைப்பொருள் ஆபத்து பரவியுள்ள விதத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்தப் பேரழிவைத் தோற்கடிப்பதற்காக அரசு ஆரம்பித்துள்ள பரந்த திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வின்போது, 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளமான ழழழ.1818.ஆலிஸ.யிவ வலைத்தளமும் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

"பெரும் பேரழிவை முறியடிக்கும் நோக்கத்துடனே எமது தேரர்கள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் இன்று இங்கு ஒன்றுகூடியிருக்கின்றார்கள். எமது அழைப்பை ஏற்று இந்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ளமைக்கு எனது கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இங்கு வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான மகா சங்கத்தினரையும் மதத் தலைவர்களையும் பார்க்கும்போது, எமக்கு முன்பாக உள்ள சவால் மிகப் பாரியதாக இருப்பினும், அதனை வெற்றிகொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகின்றது.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு நாம் இந்தப் பேரழிவை முறியடிப்பதற்காக ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினோம். புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது போதைப்பொருள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இந்தப் பேரழிவை முழுமையாக முறியடிக்க வேண்டுமானால் ஒரு கூட்டுத் திட்டம் அவசியமாகும்.

இந்த ஆண்டில் நாங்கள் கைப்பற்றிய மொத்த போதைப்பொருட்களின் அளவு 4 இலட்சத்து 38 ஆயிரத்து 330 கிலோ கிராம்களாகும். குறிப்பாக, ஐஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக 2022ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட ஒரேயொரு இளைஞர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், 2025ஆம் ஆண்டாகும்போது 1,874 பேரைக் கைது செய்துள்ளோம். இவர்களில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 பிள்ளைகளும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 13 பிள்ளைகளும், இருநூறுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகளும் அடங்குவது எமது இளைய தலைமுறையினர் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற பேராபத்தை உணர்த்துகின்றது.

நாங்கள் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 218 பில்லியன் ரூபாவாகும். கஞ்சாவையும் சேர்த்தால் அது 224 பில்லியன் ரூபாவாகின்றது. இந்த 22 ஆயிரம் கோடி ரூபா போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஒரு பலத்த 'நிழல் அரச பொறிமுறை' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலையமைப்பை உடைக்காமல் போதைப்பொருள் பேராபத்தை நமது நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது.

இன்று நாட்டில் இரண்டு குழுக்கள் மட்டுமே உள்ளன. போதைப்பொருள் மற்றும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்களுடன் பிணைந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் குழு ஒன்று உள்ளது; மற்றையது அவற்றுக்கு எதிராக நிற்பவர்களின் குழுவாகும். நாட்டில் பிரிவினை என்றால் இதனையே கூறமுடியும்.

எங்களுக்குச் சட்டம் போதாது என்றால் புதிய சட்டங்களை உருவாக்குவோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆராயப்பட்டு வருகின்றது. சில தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, சந்தேகநபர் ஒருவரைத் தடுத்துவைக்கும் காலத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைக்கவும், தேவையற்ற சில விடயங்களை வாபஸ் பெறவும் நாம் தயாராகவுள்ளோம்.

இந்தப் போதைப்பொருள் எனும் பேரழிவைத் தோற்கடிப்பதில் அரசாங்கத்தின் பொறிமுறைகள் மாத்திரமன்றி, மக்களின் பங்களிப்பும் குறிப்பாக கிராமங்கள் தோறும் மக்களுடன் நெருங்கிப் பழகும் நமது மதத் தலைவர்களின் வழிகாட்டலும் மிக அவசியமானது. கிராமங்களில் பிள்ளைகளின் விசித்திரமான மாற்றங்களை முதன்முதலில் அறிந்துகொள்பவர்கள் பெற்றோர்களும், அதன்பின் மதகுருமார்களுமே ஆவர்.

எனவே, அரசியல் பிரிவினைகளைத் தாண்டி, இந்தத் தேசிய இயக்கத்தில் அனைத்து மதத் தலைவர்களும் தீவிர பங்காளிகளாக இணைந்து செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.









No comments