Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசிடம் வலியுறுத்துவேன் - தொல். திருமாவளவன்


இலங்கை ஆட்சியாளர்கள் மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் 2018ம் ஆண்டு திட்டமிட்டவாறு நடந்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. 2023ம் ஆண்டு நடந்திருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. இப்போது 2026ம் ஆண்டிலே இருக்கிறோம். 

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி மாகாணங்கள் அமைக்கப்பெற்று மாகாணங்களுக்கான தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம் சொல்லுகிறது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே தமிழர்கள் அதிகாரம் இல்லாத பதவியாக இருந்தாலும் கூட அந்தப் பதவிக்கு வரக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். 

மேலும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அப்படி புதிய அரசமைப்புச் சட்டம் வந்தால் ஒற்றையாட்சி முறையை வலுவாகக் கொண்ட ஒரு அரசமைப்புச் சட்டமாக அது அமைக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது. 

ஆகவே எந்தச் சூழலிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியில் கூட தமிழ் தேசிய இனத்திற்கு அதிகாரம் பரவிவிடக் கூடாது, பகிர்ந்தளிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சக்திகள் கருதுகின்றன என்பதை இதிலிருந்து உணர முடிகிறது. 

அந்த அடிப்படையில்தான் தமிழ் தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கடந்த ஆட்சியின் போது சந்தித்தார்கள். தற்போதைய முதலமைச்சரையும் சந்தித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கரை சந்தித்து நான் முறையிட இருக்கிறேன். தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இது குறித்து என்னிடத்தில் விவாதித்தார்கள். 

ஆகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

No comments