பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தை கட்டடத்தை செயற்படுத்தும் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்து , உள்ளூராட்சி ஆணையாளர் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்திய குற்றத்தில் நகர சபை உறுப்பினர் வடமாகாண ஆளுநரின் உத்தரவில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
புதிய சந்தைக் கட்டடத்தை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நகர சபை உறுப்பினர் ஒருவர் செயற்பட்டமை, விசாரணையின்போது முரண்பாடான சாட்சியங்களை வழங்கியமை மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டு, அவர் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழிவகுத்தமை ஆகிய விடயங்கள் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறித்த அவதானிப்புகளின் அடிப்படையில், குறித்த உறுப்பினர் மூன்று சாதாரண நகர சபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் தடை விதித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேவேளை, பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக குழுவொன்று ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய சந்தைக்கான காணி கொள்வனவு நடவடிக்கையில், மதிப்பீட்டு அறிக்கைக்கு முரணாகச் செயற்பட்டு, மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகமான கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் விசாரணை அறிக்கையில் அவதானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த காணி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து உரிய அதிகாரங்கள் கொண்ட தரப்பினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









No comments