கித்துள் உற்பத்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள வகைப்பாட்டைப் போன்று, பனை மற்றும் தென்னை உற்பத்திப் பொருட்களையும் தனித்துவமாக வகைப்படுத்தி, அவற்றை மதுவரித் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதற்கான கோரிக்கையை உரிய தரப்புகளிடம் முன்வைக்குமாறும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி அபிவிருத்தியில் பனை, தென்னை மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் அதிகாரிகளின் நிர்வாக நடைமுறைகளால் எதிர்கொள்ளும் இடையூறுகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
கடந்த காலங்களில் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுக்கெனத் தனியான கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நடைமுறையை மீளக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்மூலம் இச்சங்கங்களின் செயற்பாடுகளைத் திறம்பட ஒருங்கிணைத்து, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகாண முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், கித்துள் உற்பத்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள வகைப்பாட்டைப் போன்று, பனை மற்றும் தென்னை உற்பத்திப் பொருட்களையும் தனித்துவமாக வகைப்படுத்தி, அவற்றை மதுவரித் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதற்கான கோரிக்கையை உரிய தரப்புகளிடம் முன்வைக்குமாறும் ஆளுநரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டுச் சுருங்கிவரும் இத்தொழில்துறைக்கு மீண்டும் புத்துயிரளிக்க முடியும் எனவும் குழுவினர் தெரிவித்தனர்.
2027ஆம் ஆண்டு கள்ளை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், ஏற்றுமதிச் செயற்பாடுகளுக்கு இடையூறாக உள்ள நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.









No comments