பூநகரி கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் காணிகளை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை நீதிமன்றின் ஊடாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் உறுதியளித்துள்ளார்.
பூநகரி கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தில் மக்களுக்குரிய காணிகளை வனவளத் திணைக்கள அதிகாரிகள் தமது திணைக்களத்துக்குரிய காணிகள் என அடையாளப்படுத்தினர். பொதுமக்களை காணிகளுக்குள் செல்லவிடாது அவர்கள் தடுத்தனர். அதனால் அங்கு மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
பொது மக்கள் சிலருக்கு எதிராக வனவளத் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொது மக்களின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு இன்று சென்றார். அங்கு அவர் இடங்களை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார்.
மக்களின் பாதிப்புகளை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் வாக்குறுதி வழங்கியனார். நாளைமறுதினம் திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு சட்ட உதவி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
No comments