மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 9 கிலோ கடத்தல் தங்கம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 5பேரை கைது செய்த புலனாய்வு துறையினர், மேலதிக விசாரணைகளை அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக் கட்டிகள், மன்னார் வளைகுடா மணாலி தீவுக்கு அருகே படகில் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் மண்டபம் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படை வீரர்கள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து மணாலி தீவு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டு படகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த இருவரை பிடித்தனர். அவர்கள் இருவரும் தங்க கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மண்டபம் மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த பையஸ் அகமத், முகமது பாரூக் ஆகியோர் என விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்களை பிடிக்க முற்பட்ட போது, அருகில் மற்றோரு படகில் இருந்த முகமது ரசாக், ஜாஸ் அகமத், ஜெயனுல் பயாஷா ஆகிய மூவரும் இவர்கள் தப்பி செல்ல உதவியுள்ளனர்.
இதனையடுத்து கடலோர பாதுகாப்பு படை நெருங்கி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், தங்கத்தை கடலில் வீச முயற்சித்தபோது அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த படையினர், இரண்டு நாட்டுப்படகு மற்றும் 9 கிலோ 700 கிராமத் தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை மணாலி தீவு பகுதியில் மறைத்து வைத்து விட்டு, கடலோர காவல் படை ரோந்து கப்பல் சென்றவுடன் மண்டபம் மரைக்காயர்பட்டிணம் கடற்கரைக்கு எடுத்து வர இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments