Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பணம் தராமல் இழுத்தடித்த திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் - கற்களைப் பெயர்த்து வசூலித்த ஒப்பந்தகாரர்!


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் நடைபாதையில் பேவர்பிளாக் கற்கள் பதித்த ஒப்பந்ததாரருக்கு மிகுதி தொகையைக் கொடுக்காமல் 2 வருடம் இழுத்தடித்தால் கற்களை பெயர்த்து எடுத்து மிகுதி தொகையை ஒரு மணி நேரத்தில் ஒப்பந்தக்காரர் வாங்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கந்தசஷ்டித் திருவிழாவின் போது, கோயில் வளாகத்தில் அவசர அவசரமாக பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. கோயிலின் வடக்கு வாசல், கலையரங்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் கற்கள் 9,340 சதுர அடி பரப்பளவில் பதிக்கப்பட்டன. இந்தப் பணிகளை ஆறுமுகநேரியைச் சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டார்.


மொத்தம் ரூ.4,53,000 மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இந்தப் பணிக்காக ரூ.3,65,000 தொகை பல கட்டமாக சண்முகத்திடம் திருக்கோயில் நிர்வாகத்தினர் வழங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளாகியும் மீதமுள்ள ரூ.88,000 வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஒப்பந்ததாரர் சண்முகம் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கோயில் வளாகத்திற்கு அழைத்து வந்து, கலையரங்கம் அருகில் ஒப்பந்தப் பணியில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்களை பிடுங்க ஆரம்பித்தார்.

இது குறித்து தகவலறிந்த திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, திருக்கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், இளநிலைப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட சண்முகத்தை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஆனால், அவர் எதையுமே காதில் வாங்காமல் கற்களை பெயர்த்து எடுக்கும் பணியிலேயே தீவிரமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவரை தடுத்து நிறுத்தினார் ஆய்வாளர் சுமதி.

”ரெண்டு வருசத்துக்கு முன்னால செஞ்ச கான்ட்ரக்ட் வேலை இது. கடன் வாங்கித்தான் இந்த வேலையைச் செஞ்சு முடிச்சேன். வேலையோட மதிப்பு 4,53,000 ரூபாய்,  பத்துப் பதினைஞ்சு தடவை அலைஞ்சு திரிஞ்சு ரூ.3,65,000 பணத்தை வாங்கினேன். மீதமுள்ள ரூ.88,0000 பணத்தை ரெண்டு வருசமாகியும் இப்போ வரைக்கும் தரல. கொரோனா காலத்துல பேங்க்ல லோனுக்கு தவணை கட்ட முடியாம தவிச்சேன். அப்பவும் கோயில் ஆபிஸ்ல வந்து கேட்டேன். மழுப்பலாவே அதிகாரிங்க பதில் சொன்னாங்க. எனக்குத் தர வேண்டிய பணத்துக்கு பதிச்சு வச்ச கல்லுகளை எடுத்துட்டுப் போலாம்னு ஆளுங்களைக் கூட்டி வந்திருக்கேன். பணத்தைக் கொடுங்கச் சொல்லுங்க. இல்லேன்னா ஒத்த கல்லு இருக்காது” என்றார் ஆவேசத்துடன்.

கோயில் தரப்பில் பணம் தர அவகாசம் கேட்டனர். ஆனால், அவர் எதையும் காதில் வாங்கவில்லை. பெரும்பாலான 100-க்கும் மேற்பட்ட கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு விட்டன.

சுமார் ஒரு மணி நேரமாக வாக்குவாதம் நீடித்த நிலையில், அதிகாரிகள் விழிபிதுங்கி நின்றனர். திருக்கோயில் உதவி பொறியாளர் சந்தனகிருஷ்ணன் மீதித்தொகையான ரூ.88,000-க்கு தனது சொந்தக் காசோலையை வழங்கினார். இதையடுத்து பெயர்தெடுக்கப்பட்ட பேவர்பிளாக் கற்கள் அந்தந்த இடத்திலேயே மீண்டும் பதிக்கப்பட்டது.

No comments