தனது இரண்டு வீடுகளையும் வாடகைக்கு வழங்கி விட்டு யாசகம் பெற்று வந்த பெண் , தொழிலதிபர் ஒருவரின் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி இரண்டு இலட்ச ரூபாயை மோசடியாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு , விலேகொட பகுதியை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் மொரட்டுவ பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு அருகில் யாசகம் பெற்று வருகின்றார். அந்நிலையில் பல்பொருள் அங்காடிக்கு வந்திருந்த தொழிலதிபர் ஒருவர் அப்பகுதியில் தனது ஏ.ரி.எம். அட்டையை தவற விட்டுள்ளார்.
அதனை கண்டெடுத்த யாசகம் பெரும் பெண் அந்த அட்டையை பயன்படுத்தி , 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பெறுமதிக்கு சலவை இயந்திரம் , ரைஸ் குக்கர் , ஆடைகள் என்பவற்றை வாங்கியுள்ள நிலையில் , மேலும் மதுபானம் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவையையும் வாங்கியுள்ளார்.
அந்நிலையில் ஏ.ரி.எம். அட்டையை தவற விட்டவர், மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் யாசகம் பெரும் குறித்த பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவர் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்தமையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை பொலிஸ் விசாரணையின் போது , குறித்த பெண்ணுக்கு இரண்டு வீடுகள் சொந்தமாக உள்ளதாகவும் , அப்போது அவற்றினை 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
No comments