தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அரச பணத்தில் சுற்று வேலி அடித்தார் என அரச அதிகாரிகளை குற்றம் சாட்டுவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேவேளை அவ்வாறு அவர்களுக்கு எதிராக நீதி விசாரணைகளை முன்னெடுத்தால் , அதிகாரிகளுக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபை ஆணையாளராக இருந்த வேளை 1988ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனுக்கு நினைவு தூபி கட்டினேன். அவ்வாறான என்னையே கடந்த ஆண்டு ஒன்றரை மணி நேரம் வீதியில் காக்க வைத்தனர். அதன் பின்னர் அஞ்சலி செலுத்த சென்ற போதும் என்னை அவமானப்படுத்தும் விதமாக செயற்பட்டனர்.
இவ்வாறான நிலையில் நினைவிடத்தினை சூழ வேலி அமைக்க அரச நிதியினை பயன்படுத்தினார்கள் என அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் வந்த நிதியை அவர்கள் வேலி அமைக்க பயன்படுத்தினார்கள். நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்து அனுப்பியது ஜனாதிபதி செயலகமே, அவர்களால் அனுப்பப்பட்ட பணத்தினை இங்குள்ள அதிகாரிகள் செலவு செய்தனர்.
ஆக எங்கள் அதிகாரிகள் மீது பழியை தூக்கி போட முடியாது. வேலி அமைக்க நிதியை அங்கீகரித்து அனுப்பி வைத்தவர்களே பொறுப்பாளிகள். அதனை செலவு செய்தவர்கள் அல்ல.
எனவே எமது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ , அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டாலோ , அதிகாரிகளுக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்.
No comments