பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் தொடரப்பட்ட பிறிதொரு வழக்கில் இருந்தும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக யாழ் .பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கடந்த ஆண்டு யாழ்,நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
அதேவேளை கடந்த ஆண்டு தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கும் யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
குறித்த இரு வழக்குகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
அதற்கு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்து வழக்குகளை கிடப்பில் போட்டு விட்டு , பிரதிவாதிகள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என மன்றுரைத்தார்.
சட்டத்தரணியின் வாதத்தை அடுத்து, இரு வழக்கில் இருந்தும் பிரதிவாதிகளை மன்று விடுத்துள்ளது.
No comments