உரிய முறையில் கழிவுகளை அகற்றாத பட்சத்தில், அந்தக் குப்பைகளிலிருந்து டெங்கு பரவக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டால், தொடர்புடைய உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்குத் தொற்று அபாய கட்டத்தில் காணப்படுகின்றது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்னவால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலில், டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான நிலைகளைக் கொண்ட, நீர் தேங்கும் வகையில் கழிவுகளைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
வெற்றுக்காணிகளைப் பராமரிக்காத உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான நிலைமைகளைக் கொண்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது எந்தவித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
உரிய முறையில் கழிவுகளை அகற்றாத பட்சத்தில், அந்தக் குப்பைகளிலிருந்து டெங்கு பரவக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டால், தொடர்புடைய பிரதேச சபைகள், நகரசபைகள், மாநகர சபை என்பவற்றுக்கு பொறுப்பான பிரதேச சபைச் செயலாளர், மாநகர சபை ஆணையாளர்களுக்கு எதிராகவும் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
No comments