கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தின் சிறையில் இருந்த சந்தேகநபர்கள் இருவர், இனந்தெரியாத நபர் வழங்கிய பால் பைக்கற்றை அருந்தி சுகவீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது சந்தேகநபர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்ததுடன், மற்றைய நபர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றார்.
விசாரணையின் பின்னர், தம்பனை பகுதியில் வைத்து தப்பியோடிய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் ஒரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்நிலையில் , துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் காதலி நேற்றைய தினம் புதன்கிழமை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையம் வந்து சந்தேகநபரை சந்தித்து சென்ற சமயம் மற்றுமொருவரும் அங்கு வந்துள்ளார்.
குறித்த நபர், சந்தேகநபர்களிடம் இரண்டு பனீஸ் , பால் பைக்கற்றை கொடுத்து விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பால் பைக்கற்றை குடித்தவுடன் மயக்கமடைந்த சந்தேக நபர்கள், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்நிலையில் பால் பைக்கற்றை கொடுத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments