ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் , அதற்கான தொகையை இரண்டு மாத கால பகுதி கடந்த நிலையிலும் ஜனாதிபதி செயலாகத்தால் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது
கடந்த ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில். தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொண்டமைக்கான செலவு விபரங்களை யாழில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக கேட்ட போது , யாழ்,மாவட்ட மற்றும் வவுனியா மாவட்ட செயலகங்களும், பூநகரி பிரதேச செயலகமும் செலவு விபரங்களை கூறியுள்ளது.
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து செல்வதற்கு , இலங்கை விமான படையின் உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது. அதற்கான செலவு விபரங்களை விமான படையிடம் கேட்ட போது , அது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விபரங்கள் என கூறி விமான படை செலவு விபரங்களை கொடுக்க மறுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திடம் செலவு விபரங்களை கேட்ட போது , ஜனாதிபதி செயலகத்தால் செலவுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலங்களிடம் கோரிய போது , வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்காக 05 இலட்சத்து 35 ஆயிரத்து 160 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்காக 03 இலட்சத்து , 89 ஆயிரத்து 23 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செலவழிக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி செயலகம் விடுவிக்கும் என மாவட்ட செயலகம் எதிர்பார்த்துள்ளது.
அத்துடன் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது , 2 இலட்சத்து 625 ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். அதற்கான செலவு விபரங்களை யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்டவற்றிடம் கேட்ட போது , அவ்வாறான செலவு எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள போது , அதற்கான செலவீனங்களை சமாளிக்க முடியாத அளவுக்கு திணைக்களங்கள் திண்டாடுவதாக திணைக்கள தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.
No comments