வடக்கிற்கு நாளைய தினம் பொலிஸ்மா அதிபர் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் , பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என தவத்திரு வேலன் சுவாமிகள் கோரியுள்ளார்.
(இன்று வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட வீடியோ )
வெடுக்கு நாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 08 பேரை பொலிஸார் கைது செய்து பொய் குற்றச்சாட்டை சுமத்தி வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரி இன்றைய தினம் நெடுங்கேணியில் போராட்டத்தை முன்னெடுத்தோம்.
நாளைய தினம் வவுனியாவில் போராட்டத்தை முன்னெடுக்க வுள்ளோம். பொலிஸாரினால் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 08 பேரையும் , பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று , விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
அதற்கு அனைத்து தரப்புக்களும் எம்முடன் இணைந்து சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக போராட முன் வர வேண்டும்.
அதேவேளை நாளைய தினம் பொலிஸ் மா அதிபர் வவுனியா வரவுள்ளதாக அறிகிறோம். எனவே நாளை வவுனியாவில் பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதுடன் ஊடாகவே , பொலிஸாருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி , சிறையில் உள்ளவர்களை விடுவிக்க முடியும் என தெரிவித்தார்.
பிக்கு ஒருவர் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே , பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீட்டில் , பொலிஸார் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூஜை வழிபாடுகளை குழப்பி , வழிபாட்டில் ஈடுபட்டு இருந்த எட்டு பேரையும் கைது செய்தனர் என ஊரவர்கள் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
No comments