தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், இயக்க வேறுபாடுகள் இன்றி போராளிகள் ஆகியோருக்கு, சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பார்த்துள்ளேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கம் ஊடாகவும், அணுகுமுறைகள் ஊடாக மட்டுமல்லாது , எமது தற்துணிவுமே யாழ் மாவட்டத்தில் எமது இனத்தின் வரலாற்றை சொல்லும் மன்னர்கள் பலரது சிலைகளை நிறுவி உள்ளோம்.
அந்த வகையில், தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.அவர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.
இவற்றினூடாகவே எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துச் செல்லப்படுவதற்கான வழிமுறையாக அமையும் என நினைக்கின்றேன்.
அதனடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட நினைவுகூரப்பட வேண்டிய தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் உள்ளனர்.
அவர்களது நினைவேந்தல்களை இயக்க வேறுபாடுகள் இன்றி, சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பார்த்துள்ளேன்.
தலைவர்கள் போராளிகளின் சிலைகளை யாழ்ப்பாண கோட்டையை சுற்றி அமைத்து , அவர்களின் வரலாறுகளை பொறிக்க எண்ணியுள்ளேன் என தெரிவித்தார்.
No comments