சஜித் பிரேமதாஸாவிற்கு ஆதரவு வழங்கும் தமிழரசி கட்சியினர் , தமக்கு சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலான டீல் தொடர்பில் மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியினர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு காரணமாக 13 ப்ளஸ் என சொல்கிறார்கள். இதனை நாம் கடந்த காலங்களிலும் கேள்விப்பட்டோம். ஆனால் அந்த 13 ப்ளஸ் என்றால் என்ன என எமக்கு தெரியாது.
என்னை பொறுத்த வரை ப்ளஸ் என்பதற்கு எல்லை இல்லை. நாங்கள் தனி நாடு கூட கோரினோம். இவர்கள் சொல்லும் அந்த அந்த ப்ளஸ் தனி நாடு வரை கூட போகலாம் இல்லாவிடின் சமஷ்டி வரையிலும் போகலாம். எனவே அந்த 13 ப்ளஸ் என்றால் என்ன என்பதனை தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் சஜித் பிரேமதாஸாவின் தேர்தல் அறிக்கையில் அவ்வாறான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தமிழரசு கட்சியினர் , சஜித் பிரேமதாசா கூட டீல் பேசி, அந்த 13 ப்ளஸ் என்பதனை பெறுவதாக இருந்தால் , அது என்ன என்பதனை மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும். இல்லை ஏனெனில் கடந்த காலங்கள் போன்று, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டும்.
அதேவேளை தமிழரசு கட்சியினரில் சிலர் சஜித் பிரேமதாஸாவிற்கு ஆதரவு என்கின்றார்கள். ஆனால் சிலர் ஆதரவு இல்லை என்கின்றனர். எனவே தமிழரசு கட்சியினர், தமக்கு சஜித் பிரேமதாஸாவுடனான டீல் தொடர்பிலும், தமது நிலைப்பாட்டையும் தெளிவாக கூற வேண்டும். என மேலும் தெரிவித்தார்.
No comments