Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இளையோருக்கு விவசாயத்தின் மீதான நாட்டம் குறைந்து அரச வேலை கோரி நிற்கின்றனர்


எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவையானதே என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பொங்கல் விழா மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

விருந்தினர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் பாரம்பரிய முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டு சடங்காசார முறைப்படி புதிதெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து அதை ஆலயத்துக்கு எடுத்து வந்து, நெல்லை உரலிலிட்டு அதனை அரிசியாக்கி பொங்கல் பொங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

51 பானைகளில் பொங்கல்கள் பொங்கப்பட்டன. இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. 

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இசைக் கருவிகள் கலைமன்றங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. 

அத்துடன் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

 1996ஆம் ஆண்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலராகப் பணியாற்றியமையும் அதன்போது இந்தப் பகுதிகளுக்கு வரமுடியாத நிலைமை இருந்தது.

28 ஆண்டுகளின் பின்னர் இங்கு வந்து பாரம்பரிய முறையில் இடம்பெறும் பொங்கல் நிகழ்வில் பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

அதேவேளை பொங்கல் நிகழ்வுக்காக வயலும், கோயிலும் சூழ்ந்த அமைதியான இடத்தை தெரிவு செய்து நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். 

விவசாயிகளுக்கு இன்று காலநிலை மாற்றம் சவாலாகி வருகிறது. விவசாயிகளின் முயற்சி ஒருபோதும் வீணாகாது. அவர்களுக்கு அதற்குரிய பலன் நிச்சயம் கிடைத்தே தீரும். 

விவசாயத்தை வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்றவேண்டும்,  இன்றைய இளையோருக்கு விவசாயத்தின் மீதான நாட்டம் குறைந்து வருகிறது.

 அரசாங்க வேலையே வேண்டும் என இளையோர் கோரி நிற்கின்றனர், ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை குறைவான வேலை என அதை அவர்கள் தெரிவு செய்கின்றார்களோ தெரியவில்லை.

தாம் நிர்வாக சேவைக்கு நுழைந்த காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளோ ஏனைய வசதிகளோ இல்லை. மிகக் கஷ்டமான காலத்திலும் மனநிறைவான, சந்தோசமான பணியையாற்றினோம்.

இன்று பல வகையான வசதிகள் இருந்தும் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கவில்லை .

அரசாங்க வேலை கிடைத்தவுடன் தமது வீட்டுக்குப் பக்கத்தில் பணியிடம் கேட்கும் போக்கே இன்று அதிகமாகக் காணப்படுகிறது. அந்த நிலைமையில் மாற்றம் தேவை.

குடும்பம் முக்கியமானது எனத் தெரிவித்த ஆளுநர், அரச பணியைப் பெற்றுக்கொண்டால் அதையும் சிறப்பாக செய்யவேண்டும் .

நல்லது செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும். வடக்கு மாகாணத்தின் முன்னேற்றத்துக்கும் செழிப்புக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன் வர வேண்டும் என தெரிவித்தார். 








No comments