அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஏதுவாக பல இடங்கள் உள்ளன எனவும், அவற்றின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்பிக்குமாறும் வடமாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் வியாழக்கிழமை கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.
கைத்தொழில்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளையும் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்த பின்னரே அவ்வாறு பணித்தார்.
அதேவேளை நீர் விநியோகம் இன்மை மற்றும் முன்னறிவித்தல் இல்லாத மின்தடை காரணமாக பாதிக்கப்படுவதாக ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம் சில தொழிற்சாலைகளின் இயந்திரங்களை இயக்குபவர்களை பழக்குவதற்கு இந்தியாவிலிருந்தே ஆட்களை வரவழைக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால் அதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதில் தாமதம் நிலவுவதாகவும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும், அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வருவதற்கு ஏதுவாக பேருந்துசேவையை ஒழுங்குபடுத்தித் தருமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆளுநரின் இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது வலி.கிழக்கு பிரதேச செயலர் எஸ்.சிவசிறி, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சி.சிவகெங்காதரனும் இணைந்திருந்தனர்.
No comments