கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் , திருவிழாவுக்கான முன்னாயத்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் , யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு திருவிழா தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி நாகராஜா, முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் பின்னர் மாவட்ட செயலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக குடிநீர், மலசலகூடம், சுகாதார வசதிகள், பேருந்து சேவை மற்றும் படகு சேவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.
விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை படகு சேவையில் ஈடுபடவுள்ள படகுகளின் தரம் தொடர்பில் கடற்படையினர் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி கடற் போக்குவரத்து கட்டணமாக 1000 ரூபாவும், குறிகாட்டுவன் துறைமுகத்திலிருந்து 1300 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கச்ச தீவு வருகை தரும் யாத்திரிகர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளது.
இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என 1000ம் பேருமாக சுமார் 9 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை பெருந்திருவிழாவுக்கு வருகைதர உள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி எதுவித இடையூறுகளும் இன்றி கலந்துகொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.
No comments