அதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆலயங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக எமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவருகின்றது
அதானல் ஆலயங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் போது, மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக இரவு வேளைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒலிபெருக்கி மூலம் இடையூறு ஏற்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகவே இதற்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது குறித்து எழுத்து மூலம் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளோம்.
இவ்வாறு அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில், அது தொடர்பில் முறைப்பாடுகளை பிரதேச செயலகங்களுக்கு அறிவித்தால், பிரதேச செயலர்கள் உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்து அந்த ஒலியின் அளவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது ஆலய திருவிழாகாலங்கள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments