இளையோர் உயிர்கொல்லி போதைப்பொருளை நாடுவதும், சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை அதிகரித்துச் செல்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக்டிறஞ்சன், வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் பா.முகுந்தன், மாவட்ட விளையாட்டுத் திணைக்கள அலுவலர்கள், மாவட்ட விளையாட்டுத்திணைக்கள அபிவிருத்தி அலுவலர்கள், பிரதேச செயலக விளையாட்டு அலுவலர்கள், பயிற்றுவிப்பாளர்களுடனான வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநர், கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
விளையாட்டுச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக சமூகப்பிறழ்வுகளை குறைக்க முடியும். நாம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி அவர்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தவேண்டும்.
இன்று பாடசாலை மாணவர்கள் ஒன்றில் தனியார் கல்வி நிலையங்களில் அல்லது கைப்பேசிகளுடன்தான் இருக்கின்றார்கள்.
அவர்களை அதிலிருந்து விடுவித்து விளையாட்டை நோக்கிக் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கின்றது.
இங்குள்ள விளையாட்டுத்துறை சார்ந்த அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகால அனுபவமிக்கவர்கள். நீங்கள் உங்கள் அனுபவங்களின் வாயிலாக எமது மாகாணத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு உளப்பூர்வமாகப் பணியாற்றவேண்டும்.
கிராமங்களில் அதிகளவான திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களைச் சரியாக அடையாளம் கண்டு பயிற்சிகளை வழங்கி உயர்த்தவேண்டும்.
2025ஆம் ஆண்டில் எமது மாகாணத்தில் விளையாட்டுத்துறையில் மாற்றங்கள் தெரியவேண்டும். தேவையான பௌதீக வளங்களைப்பெற்றுத் தருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். பெறுபேறுகள் சிறப்பாக அமைவதற்கு நீங்கள் முயற்சிக்கவேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
No comments