விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்ற மாயை வடக்கில் இப்போது தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்டிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எமது மாகாணம் தேசிய ரீதியில் இறுதியிடத்திலேயே இருக்கின்றது. இதை மாற்றியமைக்கவேண்டும்.ஆளுநர் குறிப்பிட்டதைப் போல உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையிலிருந்து இளையோரை வழிப்படுத்த விளையாட்டு மிகச் சிறந்த ஆயுதம். உண்மையில் விளையாட்டு மிகச் சிறந்த பொழுதுபோக்கு.
பாடசாலை காலங்களில் விளையாடுபவர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியில் வந்த பின்னர் அதைத் தொடர்வதில்லை. இதை நீங்கள் கவனத்திலெடுக்கவேண்டும்.
விளையாட்டுக்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அதைத் தொடர அனுமதிக்க முடியாது.
மனப்பூர்மான மாற்றம் உங்களிடமிருந்துதான் வரவேண்டும். விளையாட்டுக்களில் திறமையாகச் செயற்பட்டு இந்தப் பதவிக்கு வந்த உங்களுக்கு அந்தப் பொறுப்பு உண்டு.
விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்ற மாயை வடக்கில் இப்போது தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் வசதிகள் குறைவாக இருந்தபோது நாம் சாதித்தளவுக்கு இப்போது கிடைக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி நாம் சாதிக்கவில்லை என்பதே உண்மை.
இந்த ஆண்டு விளையாட்டுத் திணைக்களத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பௌதீக வளங்களைவிட பயிற்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு நிச்சயமாக மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.
No comments