இனிய பாரதியின் சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்ட ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஜ.டியினர் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று இனிய பாரதியின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments