உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தாய்லாந்து தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார்.
மிக நீண்டகால அனுபவம் உள்ள தாய்லாந்து இது தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாணம் விவசாய மற்றும் கடலுணவு உற்பத்திகளில் போதிய திறனைக் கொண்டுள்ளபோதும் இரு துறைகளில் விலைத்தளம்பல் இருக்கின்றது என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
இதை மாற்றியமைப்பதற்கு உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கப்பெறும்போது அதை பதப்படுத்துவதற்கோ அல்லது பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ உரிய வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தில் அனுபவமுள்ள தாய்லாந்து முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதன் ஊடாக பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை சாதகமாக அணுகுவதாக தூதுவர் பதிலளித்தார்.
அத்துடன் வேலை வாய்ப்பு தொடர்பான விடயத்தில், தாய்லாந்தில் பல இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்ட தூதுவர் வடக்கு மாகாண இளையோரும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுற்றுலாத்துறை தொடர்பிலும் தாய்லாந்து தூதுவர் கவனம் செலுத்தினார். அதற்கான உட்கட்டுமானங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
வடக்கு மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த கால போர் காரணமாக அந்த மாவட்டம் மேலெழுந்து வருவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
போதுமான வளங்கள் அந்த மாவட்டத்திலுள்ளபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமையும் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளரும் கலந்துகொண்டனர்.
No comments