Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது.


பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார நடனங்களுடன் விழா நடைபெற்ற மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். 

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் 5 பேருக்கு காலைவாரிதி விருதும் வழங்கப்பட்டது. 

அங்கு உரையாற்றிய ஆளுநர், 

சிறுவர்களாக நாங்கள் இருந்த காலத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இன்று அவ்வாறு நடைபெறுவதைக் காண்பது அரிதாக உள்ளது. நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை நாம் எடுத்துச் செல்லவேண்டும். எங்களுக்குரிய தனித்துவமான அம்சங்களை ஊடுகடத்த வேண்டும். 

 இந்தப் பண்பாட்டு விழா ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. அதிகளவு மக்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள். நாங்கள் கலாசார ஊர்த்திப் பவனியுடன் அழைத்து வருகின்றபோது ஊர்மக்கள் அபரிதமான ஆதரவு வழங்கியதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறுதான் விழாக்கள் நடத்தப்படவேண்டும். 

கலை, விளையாட்டு இரண்டிலும் இளம் சந்ததியின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கவனங்கள் சிதறவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும். எங்களால் முடிந்தவரையில் இதை நாம் செய்துகொள்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி, அராலி இந்துக் கல்லூரி அதிபர் ந.சிவானந்தராஜா மற்றும் சிற்பக் கலைஞர் தி.விஜயசிறி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். 










No comments