Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எழுவைதீவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை


எழுவைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றித்தர முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்றித் தருவதாகவும், சில விடயங்களை அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நடைமுறைப்படுத்துவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த பங்குத்தந்தை, தற்போதைய ஆளுநர் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் எழுவைதீவு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் தற்போதும் இந்தப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தேடி வந்துள்ளமை சிறப்பானது எனவும் தெரிவித்தார். 

கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சைக்குரிய பரீட்சை மண்டபம் எழுவை தீவில் அமைக்கப்படுவதில்லை என மக்கள் தெரிவித்தனர். 

குறைவான மாணவர் எண்ணிக்கை இருப்பதால் பரீட்சை மண்டபம் அமைக்கப்படவில்லை என்றும் முன்னரும் இதேபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

எழுவைதீவிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவப் பிரிவில் வெளிநோயாளர் பிரிவு மாத்திரமே இயங்குவதால் அதனை தரம் உயர்த்தி விடுதியுடனான பிரதேச மருத்துவமையாக்கி தரவேண்டும் என மக்கள் கோரினர். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பதிலளித்தார். 

பிரதேசத்திலுள்ள நன்னீர் கிணறுகள் புனரமைப்புச் செய்யப்பட்டால் அதிலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மக்கள் கோரினர். கிணறுகள் தொடர்பான பதிவுகளை ஆராய்ந்து வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக அதனைச் செயற்படுத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார். 

மேலும் வலைப்பாடு நன்னீர் கிணற்று வீதி, சேமக்காலை – வைத்தியசாலை வீதி ஆகியவற்றின் புனரமைப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிரதேச சபை ஊடாக அதனை புனரமைப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் ஆளுநரால் வழங்கப்பட்டது. 

கருவேலை மரங்களால் பிரதேசத்தின் பனை வளம் அழிவடைவதாகவும் அதனை அழிப்பதற்கான இயந்திரங்களை பிரதேச சபை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான உதவிகளை வழங்க பிரதேச சபைக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அதனைச் செய்வதற்கு பிரதேச சபையும் இணக்கம் தெரிவித்தது. 

அனலைதீவிலிருந்து கடல்நீரை சுத்திகரித்து எழுவைதீவுக்கு குழாய் மூலம் எடுத்து வரப்படும் நிலையில் தற்போது அந்தக் குழாய் கடலில் மிதப்பதாக மக்கள் தெரிவித்தனர். அத்துடன் அதன் ஊடாக போதுமான குடிநீர் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டனர். எதிர்காலத்தில் எழுவைதீவிலேயே கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் செயன்முறையை ஆரம்பிக்குமாறு பொறியியலாளர்களுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார். 

ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது கலையரங்குக்கான அடிக்கல் நடுகை செய்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், பிரதேசத்தில் ஒரு பொதுமண்டபம் கூட இல்லையென மக்கள் தெரிவித்தனர்.

 குறிப்பாக கிராமிய கலைகளை அரங்கேற்றுவதற்கான அரங்கு இல்லை என்றும் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருமாறு கோரினர். அடுத்த ஆண்டு அதற்கான நிதியைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் பதிலளித்தார். 

பத்திமா சனசமூக நிலையத்தை புனரமைத்தலுக்கான கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

எழுவைதீவிலுள்ள குளத்தை தூர்வாருவதற்கும், இதன்போது அள்ளப்படும் மண்ணை, றோ.க.த.க. பாடசாலையில் நீர் தேங்குவதால் அங்கு கொட்டுவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது. 

கடற்றொழிலாளர்களுக்கு மீன்களைப் பாதுகாப்பதற்கு ஐஸ் உற்பத்தியை மேற்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் அதனைப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும் என கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பிரதிநிதிகளால் உறுதியளிக்கப்பட்டது. 

கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்கனவே அமைக்கப்பட்டு அரைகுறையிலுள்ள தடுப்பணையை முழுமைப்படுத்தித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை அடுத்த ஆண்டு வீதி அபிவிருத்தித் திணைக்களம் அல்லது உள்ளூராட்சி மன்றம் ஊடாகச் செயற்படுத்தித் தரக்கூடியதாக இருக்கும் என ஆளுநர் பதிலளித்தார். 

மேலும், நங்கூரமிடும் இறங்குதுறை தேவை என மீனவர்கள் கோரிய நிலையில், அடுத்த ஆண்டு அது மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் பதிலளித்தார். 

இறங்குதுறையை ஆழப்படுத்தல் மற்றம் கடல்போக்குவரத்தை சீர்செய்தல் ஆகிய விடயங்களை நாரா நிறுவனத்தின் ஊடாக ஆய்வு செய்து அதன் முடிவுக்கு அமைவாக செயற்படுத்த முடியும் என ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். 

ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இறங்குதுறையிலிருந்து உள்ளூர் போக்குவரத்துச் சேவைக்கான எந்தவொரு வாகனங்களும் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

போக்குவரத்துக்கான வசதிகள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆராய்வதாகத் தெரிவித்த ஆளுநர், ஆசிரியர் பற்றாக்குறை வெகுவிரைவாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என வலயக் கல்விப் பணிப்பாளரை பணித்தார். குறிப்பாக தீவக வலயத்தினுள்கூட மனித வளங்கள் சரியாக பங்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த ஆளுநர் அதனை விரைந்து சீர் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளரை அறிவுறுத்தினார். 


No comments