"நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என தொனிப்படும் துண்டுப்பிரசுரங்களை நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகித்த பொதுமகனுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முரண்பட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதனால், நிகழ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூரில் உள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றபோது குறித்த சம்பவம் நடைபெற்றது.
நினைவேந்தல் நிறைவடைந்தபோது அங்கு நின்ற ஒருவர் துண்டுப்பிரசுரங்களை அங்கிருந்தவர்கள் மத்தியில் விநியோகித்தார்.
குறித்த துண்டுப் பிரசுரத்தில்,
மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். இச் சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும்.
இன்று எமது தமிழ் கட்சிகள் சில மக்களில் எல்லா விடயங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்து அதனை அரசியல் ஆக்கப்பார்க்கின்றனர்.
எங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் எத்தனையோ போராளிகள் ஆயுத வழியிலும், அகிம்சை வழியிலும், தன்னைத்தானே வெடித்துச் சிதறியும் போராடி மாவீர்கள் ஆனார்கள். இவர்கள் இன்றும் எங்களுக்கு தெய்வங்களே. இந்த தெய்வங்களை நாம் வணங்குவதற்கு யாரும் தடைசெய்யவோ, அரசியல் ஆக்கவோ கூடாது.
ஆனால் இந்த மாவீரத் தெய்வங்களின் வழிபாட்டினை அரசியல் கட்சி ஒன்று தனது அரசியலுக்காக பயன்படுத்துகின்றது.
எங்களுடைய மண்ணுக்காக அகிம்சை வழியில் போராடி ஆகுதியாகிய திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந் நிகழ்வு எக்காலமும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அரசியல் கட்சி ஒன்று உள்நுழைந்து தானே இதனை செய்வதாக காட்டி வருகின்றது. இது மட்டுமில்லாது வணக்கத்தை செலுத்த வரும் சிலரை வணக்கம் செலுத்த விடாமல் திருப்பி அனுப்புகின்றனர்.
அண்மையில் வணக்கம் செலுத்த வந்த அமைச்சர் ஒருவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இவ்வாறு செய்வதற்கு இவ் அரசியல் கட்சிக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அழையா விருந்தினராக வந்த இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்.
ஒரு வணக்கஸ்தலத்தில் வணக்கம் செலுத்த அனைவரிற்கும் உரிமை உண்டு. இன. மத வேறுபாடின்றி இது மதிக்கப்படல் வேண்டும். இச் செயற்பாடு அரசியலிற்கு அப்பாற்பட்டதொன்றாகும். இதில் காட்டு மிராண்டித்தனமாக யாரும் நடக்கக் கூடாது. அதுவும் மக்களின் சேவகர்கள் இதனை செய்யக்கூடாது. அந்த வகையில் மக்களால் முன்னெடுக்கப்படும் இவ் வணக்க நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதோடு. தற்போது இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி இதிலிருந்து உடன் வெளியேற வேண்டுமென வேண்டுகின்றோம் - என்றுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தவரை அச்சுறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் தாக்க முற்பட்ட நிலையில் , அங்கிருந்த ஏனையோர் அவர்களை தடுத்து, துண்டு பிரசுரம் விநியோகித்தவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
குறித்த சம்பவத்தினால் நினைவிடத்தில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
No comments