கடந்த ஆட்சி காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி. பி. சரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி. பி. சரத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி. பி. சரத் ,
யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக தமது அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அந்நிலையில் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை நேரில் ஆராய வந்துள்ளோம்.
கிளிநொச்சியிலுள்ள கிராமங்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்ற போது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து வசதிகள், அபிவிருத்திகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளதை அவதானித்தோம்.
அதேவேளை கடந்த ஆட்சி காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.
மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையினால் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
கிராமங்கள் ரீதியாக பிரஜா சக்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் ஒன்றிணைந்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர்
மீள்குடியேற்றம் அமைச்சானது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே அதிக நிதியினை ஒதுக்கியுள்ளது.
அதனால் மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பிரதேச செயலக ரீதியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியும் எனவே அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு கூறினார்.
இக் கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டீபானி டொடங்கோட, பணிப்பாளர் (மீள்குடியேற்றம்) கே. ஜி. பி. பூர்ணிமா அபேசிறிகுணவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments