இலங்கை விமான படையின் குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். குறித்த சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர்களும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஊடகங்களுக்கு அனுமதி மறுத்த அதிபர் , தனது உறவினரான யூடியூப்பர் ஒருவருக்கு அனுமதி வழங்கியதாகவும் , தனது யூடியூப்பில் மாத்திரமே நிகழ்வு குறித்ததான காணொளிகள் வர வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த யூடியூப்பரின் அறிவுறுத்தலுக்கு அமையவே அதிபர் ஊடகங்களை அனுமதிக்கவில்லை என ஊடகவியலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு , நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமான படையினர் வீசிய குண்டுகளில் 21 பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
படுகொலையான மாணவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை பாடசாலை ஆசிரியர்கள் இருவர் , பாடசாலை நுழைவாயிலில் வைத்து , ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என திருப்பி அனுப்ப எத்தனித்துள்ளனர்.
அதனை அடுத்து , ஊடகவியலாளர்கள் தாம் அதிபருடன் கதைக்க வேண்டும் என கூறிய போது , ஆசிரியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தமையால் , வாய்த்தர்க்கம் ஏற்பட்டது, அதன் பின்னர் அதிபரை சந்திக்க ஆசிரியர்கள் அனுமதித்தனர்.
அதிபரிடம் , எதற்காக ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ? கடந்த காலங்களில் இருந்த அதிபர்கள் , ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கவில்லை தாங்கள் புதிதாக அதிபராக கடமையேற்ற நிலையில் , எதற்காக ஊடகங்களை அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர்.
கல்வி வலயமே , ஊடகங்களை அனுமதிக்க வேண்டாம் என தமக்கு கூறியுள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் பாடசாலை வளாகத்தினுள் இருந்து வெளியேற வேண்டும் என அதிபர் பணித்துள்ளார்.
அதனை அடுத்து, ஊடகவியலாளர்கள் பாடசாலை வளாகத்தினுள் இருந்து வெளியேறி , வலய கல்வி பணிப்பாளருடன் தொலைபேசியில் , ஊடகவியலாளர்களை பாடசாலைக்குள் அனுமதிக்காதது , தொடர்பில் கேள்வி எழுப்பிய வேளை, வலயத்தினால் அவ்வாறு எதுவும் அதிபருக்கு கூறப்படவில்லை எனவும் , தாம் அதிபருக்கு ஊடகங்களை அனுமதிக்குமாறு கூறுவதாக கூறியுள்ளார்.
அதனை அடுத்து சிறிது நேரத்தில் பாடசாலை வளாகத்தின் வெளியே நின்ற ஊடகவியலாளர்களிடம் வந்த இரு ஆசிரியர்கள் , அதிபரிடம் பாடசாலைக்குள் வருவதற்கு முறைப்படியான அனுமதியை கோரி பெற்று , நிகழ்வில் செய்தி சேகரிக்கலாம் என கூறி சென்று இருந்தனர்.
அதற்கு தாம் அதிபரிடம் ஏற்கனவே அனுமதி கோரி இருந்தோம். அதற்கு அவர் அனுமதியில்லை பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே போங்கள் என கூறி இருந்தார். தற்போது எமக்கு அனுமதி வழங்கினால் , உள்ளே வந்து நிகழ்வில் செய்தி சேகரிப்போம் இல்லை எனில் வெளியே நிற்கிறோம் என கூறி இருந்தனர். அதன் பின்னரும் அதிபர் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கப்பெறாததால் , ஊடகவியலாளர்கள் பாடசாலை வளாகத்திற்கு வெளியே நின்று ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
அதேவேளை, கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க பல்வேறு அச்சுறுத்தல்கள் அழுத்தங்கள் இருந்த போதிலும் , அப்போதைய பாடசாலை அதிபர்கள் எதற்கும் அஞ்சாது நிகழ்வுகளை ஒழுங்கமைத்து செய்ததுடன் , ஊடகங்களையும் அனுமதித்து இருந்தனர்.
தற்போதைய அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேதும் ஏற்படுத்தாத நிலையில் , பாடசாலை அதிபர் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து தன்னிச்சையாக செயற்பட்டமை தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
No comments