பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவை இயக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மருத்துவமனையின் பணிப்பாளரை பாராட்டுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவரைப்போன்று ஏனைய மருத்துவமனைப் பணிப்பாளர்களும் செயற்பட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
அதன் போது, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள், கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பூர்த்தி செய்யப்படாத விடயங்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஏனைய தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
அதனை அடுத்து ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவமனை அத்தியட்சகர் உள்ளடங்கலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments