இடமாற்றங்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அதே பாடசாலைகளில் ஆசிரியர்களை கையெழுத்திட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் என்பவற்றுடன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்பின் போது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை இன்னும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைகளும் அதிகரித்துச் செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கொள்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அது 2027ஆம் ஆண்டு இடமாற்றத்திலிருந்து நடைமுறையாகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அதிபர்களுக்கான இடமாற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ள போதும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டமையடுத்து, தொடர்புடைய தொழிற்சங்களுடன் கலந்துரையாடிய பின்னர் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம் தற்போது வழங்கப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அதே பாடசாலைகளில் கையெழுத்திட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கேள்வி எழுப்பப்பட்டது.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.
அதேநேரம், மாகாண ரீதியாக சில பாடங்களுக்கு ஆசிரிய ஆளணி மேலதிகமாக உள்ளது. அத்தகைய பாடங்களுக்கு எந்தவொரு பாடசாலைகளிலும் ஆசிரிய வெற்றிடம் இருக்கக் கூடாது. இதை சீர் செய்யுமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு அமைவாக இரு வாரங்களுக்கு இதனைச் சீர் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களை ஆளுநர் பணித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்டு வெளி மாகாணங்களில் நீண்ட காலம் கற்பிக்கும் ஆசிரியர்களை மாகாணத்துக்குள் உள்வாங்குவதற்கான பொறிமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனங்களில் இன்னமும் கடமைகளைப் பொறுப்பேற்காத அதிபர்களின் விவகாரமும் ஆராயப்பட்டது. இது தொடர்பில் குழு நியமித்து அதன் முடிவை ஆளுநருக்கு அறிவிப்பதென்று கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் ஓய்வூதியம் இழுத்தடிக்கப்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. ஆசிரியர்கள் ஓய்வுபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அவர்களது கோவைகளைப் பார்வையிட்டு ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் அவர்களுடைய ஓய்வூதியம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.
No comments