ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை தேசிய மக்கள் சக்தி அழிக்கும் என கடற்தொழில் அமைச்சர் இ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்து செய்தியில்,
'ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த அவதாரமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்.
' அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். அதற்குரிய பணியை நாம் செய்து வருகின்றோம். எமது ஆட்சியில் அநீதிக்கு இடமில்லை. சமூகநீதி என்பதே முதன்மைக்கொள்கையாகும். எனவே, எமது ஆட்சியின் கீழ் நிச்சயம் இருள் நீங்கி, மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்.
தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அது உண்மைதான் கடந்தகாலங்களில் இந்நாட்டை ஆண்டவர்கள் தீமைகளையே பெரிதும் இழைத்துள்ளனர். இதன்காரணமாகவே மக்களின் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலர்ந்துள்ளது.
இந்நன்னாள் நாட்டுமக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்த வேண்டும். அனைவர் வாழ்விலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும், வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments