சுதுமலை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அசமந்தப் போக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சீரணி நாகம்மாள் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை சென்றது. பின்னர் பிரதேச செயலக பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
எமது சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் தொன்மையும், புதுமையும் வாய்ந்த ஒரு ஆலயம். தற்போது ஆலயம் 48 கோடி ரூபாய் நிதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புனரமைப்பு பணிகளுக்காக எனக் கூறி மூதாதையர்கள் அமைத்த பழமையான கட்டடங்கள் இடித்தழிக்கப்பட்டன. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. புனரமைப்பு பணிகளை நாங்கள் தடுக்கவில்லை ஆலயத்தின் பழமையை பேணிப் பாதுகாக்க வேண்டும். ஆலயத்தில் பழமையே எமது இருப்பினையும் எடுத்துக்காட்டும்.
பழைய கட்டடத்தை இடிக்கக் கூடாது என நாங்கள் ஏற்கனவே பிரதேச செயலகத்தின் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் எம்மை கூப்பிட்டு விசாரணை செய்யாமல் கட்டடத்தை இடிப்பதற்கான அனுமதி கடிதத்தை பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.
பிரதேச செயலகத்தின் துணையுடனேயே இந்த கட்டடம் இடிக்கப்பட்டது.
எமது ஆலயத்திற்கு என் ஒரு பாரம்பரிய அமைப்பு இருக்கின்றது. அந்த அமைப்பிலேயே இனி அமைக்கப்படவுள்ள எமது ஆலயம் அமைக்கப்பட வேண்டும். தேவைற்ற கட்டடங்கள் ஆலயத்திற்கு தேவை இல்லை. இனி இடம்பெறுகின்ற நிர்மாண பணிகள் அரச திணைக்களம் ஒன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
No comments