யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் தங்க நகைகள் மற்றும் பணம் என்பவை பேருந்தில் களவாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தனில் உள்ள தனது மகளிடம் கையளிப்பதற்காக 10 பவுண் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றுடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் - வவுனியா பேருந்தில் பயணித்துள்ளார்.
பரந்தனில் இறங்கிய போதே , தனது பை திறந்திருப்பதனை அவதானித்து , பணம் மற்றும் நகையை பார்த்த போது அவை களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது
அதற்குள் பேருந்து அங்கிருந்து பயணித்தமையால் , செய்வதறியாது திகைத்து நின்றவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது , யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி அங்கு சென்று முறையிடுங்கள் என அறிவுறுத்தி , தொடர்பிலக்கத்தை பெற்றுக்கொண்டு அனுப்பியுள்ளனர்
மீள கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற போது , பொறுப்பதிகாரி வர வேண்டும் என நீண்ட நேரம் வயோதிப பெண்ணை காத்திருக்க வைத்த நிலையில், பொறுப்பதிகாரி வந்ததும் அவரிடம் முறையிட்ட போது , முறைப்பாட்டை செய்யுமாறு கூறி சென்றிருந்தார் .
அந்நிலையில் பொலிஸார் முறைப்பாட்டை எழுதும் போது, அவை எங்கே களவாடப்பட்டது என கேட்டுள்ளனர். அவர் ,களவாடப்பட்ட இடம் தெளிவாக தெரியாது. பரந்தனில் இறங்கி பார்த்த போதே களவாடப்பட்ட விடயம் தெரியும் என கூறியுள்ளார்.
அதனை அடுத்து , பரந்தனுக்கு முதலே உங்கள் நகை மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளது எனவே நீங்கள் பளை பொலிஸ் நிலையத்தில் தான் முறையிட வேண்டும் என கூறி நீண்ட நேரத்தின் பின்னர் இரவு 07 மணிக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
இரவு நேரமானதால் , அவர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ள நிலையில் , நாளைய தினம் புதன்கிழமையே பளை பொலிஸ் நிலையம் சென்று முறையிட உள்ளார்.
அதேவேளை வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றதாகவும் , அவரே நகைகள் மற்றும் பணத்தினை களவாடி இருப்பார் என பாதிக்கப்பட்ட வயோதிப பெண் சந்தேகம் வெளியிட்டுள்ளார்
பேருந்துக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் ஊடாக, இவ்வாறான திருட்டு சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் ஒரு சில பேருந்துக்களில் மாத்திரமே கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துக்களில் கமராக்கள் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது






No comments