ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடைய வலியுறுத்தலையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்புச் செய்வது தொடர்பில் தாம் பரிசீலணை செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கையர்தினம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் மற்றும் கருத்தறியும் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலின்போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரவிகரன் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, எனக்குரிய கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கூடுதல் கவனம்செலுத்தி அவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தேன்.
குறிப்பாக கடந்த 19.11.2025அன்று இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் தமிழ் அரசுக்கட்சியின் தலைமைகள் கோரிக்கை முன்வைத்திருந்தமையினையும் இதன்போது ஜனாதிபதிக்கு நினைவூட்டியிருந்தேன்.
அத்தோடு தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கிளிநொச்சி மருதநகரைச்சேர்ந்த ஆனந்தசுதாகருடைய மனைவி ஏற்கனவே இறந்துள்ள நிலையில், அவருடைய இரண்டு பிள்ளைகளையும் பராமரித்துவந்த அந்த பிள்ளைகளின் அம்மம்மாவும் உயிரிழந்துள்ளார் என்பதையும், ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
எனவே இதேபோலவே ஒவ்வாரு தமிழ் அரசியல் கைதிகளுடைய குடும்பங்களும் ஏதோ ஒருவிதத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர் என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.
எனவே இந்த விடயத்தில் மனிதாபிமானத்துடன் அணுகி, எதிர்வரும் டிசெம்பர்மாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிசெய்து நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களதும் கருத்துக்களைச் செவிமடுத்த பிற்பாடு ஜனாதிபதி பதிலளிக்கும்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தாம் பிரிசீலணை செய்வதாக தெரிவித்தார் என ரவிகரன் மேலும் தெரிவித்தார்






No comments