வடக்கில் முன்னெடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகளில் துறைசார்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகள் கண்டுகொள்ளப்படாமல் விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
"வரலாறு காணாத பேரனர்த்தம் ஒன்று இந்த நாட்டையே உலுக்கிப் போட்டிருக்கிறது.
இலங்கையின் வரலாற்றிலே சுனாமிக்கு அடுத்த படியாக அதிகளவான உயிரிழப்புக்களையும், சுனாமியைவிட அதிளவான பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ள பேரவலமாக இந்த இயற்கை அனர்த்தம் அமைந்துள்ளது.
சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையிலே மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பான எதிர்வுகூறல்கள் முன்னெச்சரிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முன்னேற்பாடுகள் செய்ப்பட்ட இந்த அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கான விழிப்புணர்கள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டிருக்குமாயின் இழப்புக்களை குறைத்திருக்க முடியும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது முன்னெடுக்கப்படுகின்ற மீட்பு நடவடிக்கைகளிலும், பெரும்பாலான இடங்களில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் துறைசார்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகள் கண்டுகொள்ளப்படாமல் விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்ற விமர்சனம் காணப்படுகிறது.
தற்போதைய சூழலில் எல்லோரும் இணைந்து எமது மக்களுக்கான சுமூக நிலை விரைந்து ஏற்படத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
இதனையே நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி அவர்களும் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் எமது பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு எங்களுடைய பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்களுக்கு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எமது பிரதேசங்களில் எங்களுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இந்தச் சூழலிலே பல்வேறு நாடுகளும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன.
குறிப்பாக, எமது நாட்டுக்குள் ஊடுருவிய சூறாவளி எமது எல்லைகளை கடப்பதற்கு முன்னதாகவே, மீட்பு நடவடிக்கைகளுக்காக நேரடியாக இந்தியா களம் இறங்கியிருந்தது.
பாரத தேசத்தின் இந்த நடவடிக்கை எமது மக்களுக்கு ஒரு நம்பிக்கைய ஏற்படுத்தி இருக்கின்றது. எமக்கு துன்பம் நேர்ந்தால் இந்தியா வந்து இறங்கும் என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது.
எமக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உணர்வு ரீதியான இந்தப் பிணைப்பு தொடர வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தினை பதிவு செய்வதுடன் இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் அதேபோன்று உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்ற ஏனைய நாடுகளுக்கும் எமது மக்கள் சார்பாகவும், எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்" என தெரிவித்தார்.






No comments