வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடமாடும் மருத்துவ கிளினிக்குகள் மற்றும் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்களுடன் நேரடியாக களத்தில் இணைந்து, எமது வைத்திய அதிகாரிகள் தங்கள் அர்ப்பணிப்பு, பொறுப்பு உணர்வு மற்றும் மனிதநேயப் பணிப்புலத்துடன் இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எமது (GMOA) மருத்துவர்கள் வழங்கி வரும் பெரும் சேவையின் தேவையை இந்தப் பேரிடர் சூழல் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அவசர வைத்திய தேவைகளுக்கான வாட்ஸ்அப் இணைப்பு இவ்வனர்த்த நிலைமையை முன்னிட்டு, வடமாகாணத்தில் பொதுமக்களின் அவசர வைத்திய தேவைகள் எதற்காகவும் தொடர்பு கொள்ள (76) 220 2990 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எண்ணிற்கு தகவல் அனுப்பி, உங்களின் அவசர வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சை உதவிகளைப் பெறலாம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளராகிய நான், இந்த மனிதநேய சேவையில் பங்கேற்று வரும் அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும், அவர்களை ஆதரித்து செயல்படும் சுகாதாரத் துறையினருக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வடமாகாண மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சேவையை உறுதி செய்யும் பாரிய பொறுப்பில் உறுதியாக நிற்கிறது என மேலும் தெரிவித்தார்.






No comments